"இன்னும் கால அவகாசம் உள்ளது" : நாடாளுமன்றத்தை திறந்து வைக்க ஜனாதிபதியை அழைக்க வேண்டும் - திக் விஜய் சிங்


இன்னும் கால அவகாசம் உள்ளது : நாடாளுமன்றத்தை திறந்து வைக்க ஜனாதிபதியை அழைக்க வேண்டும் - திக் விஜய் சிங்
x

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

இந்தூர்,

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. மக்களவை செயலகமும் இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும். எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரால் அல்ல என்றும் ராகுல் காந்தி சமீபத்தில் கூறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், நாட்டின் ஜனாதிபதியால் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடி தனது "தவறுகளை" நீக்கி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்கலாம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் சென்ட்ரல் விஸ்டாவை எதிர்க்கவில்லை. முதன்முறையாக பழங்குடியின பெண் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அவரை விழாவிற்கு அழைக்காததன் மூலம், ஜனாதிபதி பதவி அவமதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் ஜனாதிபதி மற்றும் இரு அவைகளை (லோக்சபா மற்றும் ராஜ்யசபா) கொண்டிருக்கும் என்று கட்டுரை கூறுகிறது. இன்னும் கால அவகாசம் இருக்கிறது. மே 28 ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்கும் வகையில் திட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டும்" என்று திக்விஜய் சிங் கூறினார்.


Next Story