'இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' - ஜெய்ராம் ரமேஷ்
ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான அரசியல் சூழல்கள் நிலவுவதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து நான்காவது ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு குறித்து முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. செய்ய வேண்டியதை நாங்கள் சரியாக செய்வோம். ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான அரசியல் சூழல்கள் நிலவுகின்றன. இதை கருத்தில் கொண்டு தொகுதி பங்கீடு குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்."
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.