சுரங்கத்தினுள் தொழிலாளர்களுடன் முதல் சந்திப்பு.. தோளில் தூக்கி கொண்டாட்டம்: நினைவுகூர்ந்த மீட்புக் குழுவினர்


சுரங்கத்தினுள் தொழிலாளர்களுடன் முதல் சந்திப்பு.. தோளில் தூக்கி கொண்டாட்டம்: நினைவுகூர்ந்த மீட்புக் குழுவினர்
x
முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமியுடன் மீட்புக்குழுவினர்
தினத்தந்தி 29 Nov 2023 6:36 AM GMT (Updated: 29 Nov 2023 9:34 AM GMT)

இடிபாடுகளை அகற்றும்போது ஆகர் எந்திரம் தடைகளை எதிர்கொண்டதால் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர்.

உத்தரகாசி:

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில், 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்கள் நடந்த தீவிர மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைந்து, 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி நாடே மகிழ்ச்சியடைந்துள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

மிகவும் ஆபத்தான மீட்பு பணியின் ஒரு கட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இடிபாடுகளை அகற்றும்போது ஆகர் எந்திரம் தடைகளை எதிர்கொண்டது. எனவே, எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் இப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். 12 பேர் கொண்ட இந்த குழுவினர், தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்ததும், தொழிலாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மீட்புக் குழுவினரை தோளில் தூக்கி கொண்டாடினர்.

இதுபற்றி அந்த குழுவில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த குரேஷி கூறுகையில், நாங்கள் இடிபாடுகளின் கடைசிப் பகுதியை அடைந்தபோது அவர்கள் பேசுவதை கேட்க முடிந்தது. உடனே இடிபாடுகளை அகற்றிவிட்டு மறுபக்கம் இறங்கினோம். அப்போது மகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள் நன்றி தெரிவித்ததுடன், என்னை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் என்னை தோளில் தூக்கி கொண்டாடினார்கள்' என்றார்.

குரேஷி, டெல்லியில் உள்ள ராக்வெல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் நிபுணர் ஆவார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குமார் கூறும்போது, 'தொழிலாளர்கள் எனக்கு பாதாம் பருப்பைக் கொடுத்தனர். பின்னர் என் பெயரைக் கேட்டார்கள். சிறிது நேரத்தில் எங்கள் குழுவினர் அனைவரும் உள்ளே வந்தார்கள். நாங்கள் அரை மணி நேரம் அங்கே இருந்தோம். அப்போது தேசிய பேரிடர் மீட்பு படையினரும் உள்ளே வந்து சேர்ந்தனர். அதன்பிறகே நாங்கள் திரும்பினோம். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாங்களும் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.

ராக்வெல் எண்டர்பிரைசஸின், 12 பேர் கொண்ட எலிவளை சுரங்க தொழில்நுட்ப குழுவின் தலைவர் வக்கீல் ஹாசன் கூறியதாவது:-

4 நாட்களுக்கு முன்பு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனம் எங்களை அணுகியது. இடிபாடுகளில் இருந்து ஒரு பகுதியை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது. நாங்கள் திங்கட்கிழமை மாலை 3 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பணியை முடித்தோம். 24 முதல் 36 மணி நேரத்தில் பணிகளை முடிக்க முடியும் என கூறியிருந்தோம். அதன்படி பணியை முடித்தோம். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக நாங்கள் கட்டணம் எதுவும் வாங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story