கலாய்த்து விடுவார்கள்; ராகுல் காந்தியின் பேச்சை திருத்திய மூத்த தலைவர்... அதனையும் கலாய்த்த பா.ஜ.க., வைரலான வீடியோ
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரை சந்தித்து அவையில் பேசுவதற்கான வாய்ப்பை எப்படி கேட்டு பெற்றேன் என ஊடகங்களிடம் இன்று ராகுல் காந்தி விளக்கம் அளித்து உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, லண்டன் நகரில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவின் ஜனநாயகம் பற்றி குறிப்பிட்டு பேசி சர்ச்சை ஏற்படுத்தினார்.
இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படுவதற்கான எந்த விசயங்களையும் செய்யவில்லை என கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெளிநாட்டில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால், அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, அவையில் பேசுவதற்கான வாய்ப்பை வழங்கும்படி எப்படி கேட்டு பெற்றேன் என ஊடகங்களிடம் இன்று விளக்கம் அளித்து பேசினார்.
அப்படி அவர் பேசியபோது, துரதிர்ஷ்டவசத்தில், நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். நாடாளுமன்றத்தில் 4 மந்திரிகளால் குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டு உள்ளன. பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டியது என்பது எனது ஜனநாயக உரிமை என்று கூறினார்.
பேச்சின் தொடக்கத்தில் அவர், நாடாளுமன்ற உறுப்பினரானதே துரதிர்ஷ்டவசம் என்ற வகையில் பேச ஆரம்பித்தது சர்ச்சையானது. உடனே அவர் அருகில் அமர்ந்து இருந்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தியின் பக்கம் சற்று குனிந்து, கவனித்து பேசவும் என முணுமுணுக்கும் வகையில் கூறினார். உங்களை அவர்கள் (பா.ஜ.க.) கலாய்த்து தள்ளி விடுவார்கள். அதனால், துரதிர்ஷ்டவசத்தில் என்ற வார்த்தையை சரியான முறையில் உபயோகிக்கும்படி அறிவுரை வழங்கினார். எனினும், அவரது பேச்சு மைக்கில் தெளிவாகவும், பலத்த சத்தத்துடன் கேட்டதுடன் கேமிராவிலும் பதிவானது.
அதன்பின்னர், ராகுல் காந்தி பேசும்போது, நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன், துரதிர்ஷ்டவசத்தில் உங்களுக்கு... என பேச்சை தொடர்ந்து பேசினார். இந்த வீடியோ வைரலானதும், பா.ஜ.க.வினர் ராகுல் காந்தியை நகைக்கும் வகையில் கேள்விகளை தொடுக்க தொடங்கினர்.
எவ்வளவு தான் மற்றும் எவ்வளவு நாளைக்கு தான் நீங்கள் அவருக்கு கற்று கொடுத்து கொண்டே இருப்பீர்கள்? என பா.ஜ.க மூத்த தலைவர் சம்பித் பத்ரா, தொடர்புடைய ராகுல் காந்தியின் பேச்சு அடங்கிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்து, கேள்வி எழுப்பி உள்ளார்.
ராகுல் காந்தி தொடர்ந்து பேசும்போது, நாடாளுமன்றத்தில் நாளை (வெள்ளி கிழமை) பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், பேச அனுமதிக்கப்படுவேனா? என்பது உறுதியாக தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.