திருவனந்தபுரத்தில் கட்சியினருக்கு பணி நியமன குற்றச்சாட்டு: மேயருக்கு விளக்கம் கேட்டு கேரள ஐகோர்ட்டு நோட்டீசு
இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமையை பெற்றவர்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன்.இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமையை பெற்றவர். இந்தநிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் காலியாக உள்ள 295 தற்காலிக பணியிடங்களுக்கு கட்சியினரின் பட்டியலை தயார் செய்யும்படி மேயர் ஆர்யா ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பனுக்கு எழுதியதாக கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த கடித விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீகுமார் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என கேட்டது. அதற்கு தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை என்றும் முதற்கட்டமாக விசாரணை நடந்து வருவதாகவும் அரசு வக்கீல் தெரிவித்தார். இதை தொடர்ந்து இந்த பிரச்சினை மேயருக்கு எதிரானது என்பதால் அவருடைய விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.