புதிய வகை கொரோனா: சமூக வலைதளங்களில் உலா வரும் வதந்திகளை நம்ம வேண்டாம் - மத்திய அரசு


புதிய வகை கொரோனா: சமூக வலைதளங்களில் உலா வரும் வதந்திகளை நம்ம வேண்டாம் - மத்திய அரசு
x

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது.

புதுடெல்லி,

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.

இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.

இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

இது தவிர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . இந்தச் சூழலில் புதிய வகை கொரோனா பிஎப்.7 வைரஸ் குறித்த ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் வைரலாகி உள்ளது. அதில் பிஎப்.7 வைரஸ் மிகவும் தீவிரமானது என்றும், டெல்டா வேரியன்டை விட ஐந்து மடங்கு அதிக வீரியம் மிக்கது மற்றும் அதிக இறப்பு விகிதத்தைக் அதிகம் கொண்டுள்ளது என்றும் அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தச் செய்தி போலி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் மற்றும் பகிர வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதிய வகை கொரோனா டெல்டா வேரியன்ட் அதிகளவில் பரவக்கூடியதாக இருந்தாலும் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை பெரிய அளவில் இருக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story