ஜனநாயகத்தை நசுக்கியவர்கள், அதை காப்பதுபோல் பேசுகிறார்கள் - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்


ஜனநாயகத்தை நசுக்கியவர்கள், அதை காப்பதுபோல் பேசுகிறார்கள் - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
x

ஜனநாயகத்தை நசுக்கியவர்கள், தற்போது அதை காப்பது போல் பேசுகிறார்கள். பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் நாட்டை ஆள்கிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இதையொட்டி, நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து விஜய்சவுக் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமின்றி, பாரத ராஷ்டிர சமிதி, இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் பங்கேற்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் இந்தியாவை இழிவுபடுத்தும்வகையில் பேசியதாக குற்றம்சாட்டி, அவர் மன்னிப்பு கேட்குமாறு பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. அதை கண்டிக்கும்வகையில் இப்பேரணி நடந்தது.

சர்வாதிகாரி

பேரணி முடிவில், விஜய் சவுக்கில் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவினர், ஜனநாயகத்தை நசுக்கி அழித்தவர்கள். அவர்கள் தற்போது ஜனநாயகத்தை காப்பது போலவும், நாட்டின் பெருமையை காப்பது போலவும் பேசி வருகிறார்கள்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை. பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல் நாட்டை ஆண்டு வருகிறார். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை நசுக்கி வருகிறார்கள்.

பிரதமர் மோடியே வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை எத்தனையோ தடவை கேலி செய்துள்ளார். உதாரணமாக, சீனா, தென்கொரியா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அப்படி பேசியுள்ளார்.

பிரதமர் இந்தியாவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம். ராகுல்காந்தி பேசினால் மட்டும் அதை குற்றமாக பார்க்கிறார்கள்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு

அதானி குழும மோசடி விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக மத்திய அரசு இதையெல்லாம் ெசய்து வருகிறது. அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துமாறு கோரி வருகிறோம்.

ஆனால், மத்திய அரசு கவனத்தை திசைதிருப்பி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறோம். கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு தொடர்ந்து கோருவோம்.

மேலும், மாநிலங்களவையில் என்னை பாரபட்சமாக நடத்துகிறார்கள். அவை முன்னவர் 10 நிமிடங்கள் பேசினார். ஆனால், நான் பேச எழுந்தவுடன் 2 நிமிடங்களில் சபையை ஒத்திவைத்து விட்டனர் என்று அவர் கூறினார்.


Next Story