'ராமர் கோவிலை கட்ட ஒருபோதும் விரும்பாதவர்கள்தான் குடமுழுக்கு விழாவிற்கு வர மறுக்கிறார்கள்' - புஷ்கர் சிங் தாமி


ராமர் கோவிலை கட்ட ஒருபோதும் விரும்பாதவர்கள்தான் குடமுழுக்கு விழாவிற்கு வர மறுக்கிறார்கள் - புஷ்கர் சிங் தாமி
x
தினத்தந்தி 29 Dec 2023 10:41 AM GMT (Updated: 29 Dec 2023 11:30 AM GMT)

பிரதமர் மோடியின் தலைமையில் ராமர் கோவிலை கட்டுவது சாத்தியமாகியுள்ளது என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், விழாவிற்கு வர மறுப்பு தெரிவிப்பவர்கள் குறித்து உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ராமர் கோவிலை கட்டுவதற்காக அனைவரும் நீண்ட காலமாக காத்திருந்தோம். பிரதமர் மோடியின் தலைமையில் இது சாத்தியமாகியுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை உலக மக்கள் அனைவரும் காண இருக்கின்றனர். ராமர் கோவிலை கட்ட ஒருபோதும் விரும்பாதவர்கள்தான் குடமுழுக்கு விழாவிற்கு வர மறுக்கிறார்கள்.

'இந்தியா' கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, குறிப்பாக கபில் சிபல் உள்ளிட்டோர் ராமர் கோவில் கட்டுமானத்தை தடுக்க அவர்களால் முடிந்தவரை முயற்சி செய்தார்கள். அவர்களிடம் இருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது."

இவ்வாறு புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.


Next Story