மணிப்பூரில் ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலம்


மணிப்பூரில் ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Sep 2023 5:04 AM GMT (Updated: 29 Sep 2023 5:14 AM GMT)

மணிப்பூரில் பள்ளி மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்றும் ஊர்வலமாக சென்றனர்.

இம்பால்,

இரு தரப்பினரிடையே நீடித்து வரும் கலவரங்களால் மணிப்பூர் மாநிலம் கடந்த சில மாதங்களாக பெரும் பதற்றத்தின் பிடியில் உள்ளது. அங்கு ராணுவம் முதல் உள்ளூர் போலீசார் வரை மேற்கொண்டு வரும் அமைதி நடவடிக்கைகள் எந்த தீர்வையும் கொடுக்கவில்லை.

அங்கு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மெய்தி இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர், குகி இன பயங்கரவாதிகளால் கடந்த ஜூலை மாதம் கடத்தி செல்லப்பட்டு இருந்தனர். அவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 25-ந்தேதி சமூக வலைத்தளங்கள் மூலம் அம்பலமானது. இது மாநிலத்தில் பெரும் பதற்றத்தை கிளப்பி இருக்கிறது. இதனால் அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை பாதுகாப்பு படையினர் தடுத்ததால் வன்முறையும், போலீசாரின் தடியடி, துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

எனினும் இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. மாநிலத்தின் பல இடங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாக சென்றனர். கண்டன ஊர்வலம் அமைதியாகவே நடந்தது. முதல் 2 நாள் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் நேற்றைய ஊர்வலத்தை பாதுகாப்பு படையினர் அனுமதித்தனர். முன்னதாக, மாணவர்கள் மீது முதல் 2 நாட்கள் நடந்த பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன் பயங்கரவாதிகளும் வெளிப்படையாக சுற்றி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் போலீஸ் படை ஒன்றின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களுடன் கருப்பு சீருடையில் ஆயுதங்களுடன் சில பயங்கரவாதிகளும் இருந்ததை போலீசார் கண்டனர்.

இந்த பயங்கரவாதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போலீசாரையும், வாகனங்களையும் தாக்குவதற்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியவாறு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைப்போல தென்நவுபலில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் ஒன்றிலும் பயங்கரவாதிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்திருந்தார். இவ்வாறு சமீபத்தில் அங்கு நடந்து வரும் பல்வேறு தாக்குதல்களில் பயங்கரவாதிகள் நேரடியாக பங்கேற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மணிப்பூரில் பதற்றத்தை அதிகரிப்பதற்காக போராட்டக்காரர்களுடன் பயங்கரவாதிகளும் கலந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த 11-ந்தேதி பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அது தற்போது உறுதியாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story