நீதிபதி நாக்கை துண்டிப்போம் என மிரட்டல்; நீதி துறையை அச்சுறுத்துவது காங்கிரசுக்கு புதிதல்ல: மத்திய மந்திரி ரிஜிஜூ
ஆட்சிக்கு வந்தபின், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி நாக்கை துண்டிப்போம் என காங்கிரஸ் கட்சி மிரட்டிய நிலையில், நீதி துறையை அச்சுறுத்துவது காங்கிரசுக்கு புதிதல்ல என மத்திய மந்திரி ரிஜிஜூ கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.
இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. எனினும், கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து உள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் கூட இந்த விசயம் எதிரொலித்தது.
இந்த விவகாரம் பற்றி, காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கட்சி சார்பில் கடந்த 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய மணிகண்டன், நாங்கள் எப்போது ஆட்சிக்கு வருகிறோமோ, அப்போது, ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்பும் தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் நாக்கை துண்டிப்போம் என மிரட்டும் வகையில் பேசினார்.
இதுபற்றி மத்திய சட்ட துறை மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று பேசும்போது, நீதி துறையை காங்கிரஸ் கட்சி அச்சுறுத்துவது ஒன்றும் முதன்முறையாக நடக்கும் ஒன்று இல்லை.
நெருக்கடி காலத்திற்கு முன்பும் கூட காங்கிரஸ் கட்சியினர் நீதி துறையை தாக்கி உள்ளனர். தற்போதும் அவர்கள் இதனை செய்கின்றனர். ஏனெனில் அவர்கள் விரும்பிய விசயங்களை செய்ய முடியாத எரிச்சலில் உள்ளனர். நாங்கள் அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என பேசியுள்ளார்.