மும்பையை தகர்க்க மிரட்டல் எதிரொலி; கர்நாடக கடலோர பகுதிகளில் உஷார் நிலை


மும்பையை தகர்க்க மிரட்டல் எதிரொலி; கர்நாடக கடலோர பகுதிகளில் உஷார் நிலை
x

மும்பையை தகர்க்க மிரட்டல் வந்துள்ளதால் கர்நாடக கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

மங்களூரு;

மும்பையை தகர்க்க மிரட்டல்

நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி நகரில் பல பகுதிகளில் அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டை போல மும்பையை தகர்க்க போவதாக பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்துள்ளது.

இதன்காரணமாக மும்பை நகர் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடலோர பகுதிகளில்...

மும்பைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கர்நாடகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலோர பாதுகாப்பு படையினர் அரபிக்கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை சூப்பிரண்டு அப்துல் அகமது தெரிவித்துள்ளார்.


Next Story