3 பா.ஜனதா எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தற்காலிகமானது தான் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சாகேத் கோகலே கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை எம்.பி.யுமான சாகேத் கோகலே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பா.ஜனதா எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எண்ணிக்கை எப்போது வேண்டுமானலும் 237 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. மோடியின் கூட்டணி ஆட்சி தற்காலிகமானது தான். அது நீடிக்க வாய்ப்பே இல்லை" என்றார்.
இதற்கு அம்மாநில பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா கூறுகையில், "கடந்த 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி அமைப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது. ஆனால் 3-வது முறையாக அவர்களின் கனவுகளை தவிடு பொடியாக்கி உள்ளோம். மேற்கு வங்களாத்தில் பா.ஜனதாவை சேர்ந்த எந்த எம்.பி.க்களும் திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை" என்று கூறியுள்ளார்.