மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவ மதவழிபாட்டு தலத்திற்கு தீ வைப்பு - உ.பி. இளைஞர்கள் கைது
மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவ மதவழிபாட்டு தலத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் உ.பி. இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் நர்மதபுரம் மாவட்டம் சிக்குபுரா கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலமான சர்ச் உள்ளது. பழங்குடியினர் பெரும்பான்மையாக கொண்ட இந்த பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலத்தில் பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.
இதனிடையே, இந்த கிறிஸ்தவ மதவழிபாட்டு தலம் நேற்று முன் தினம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. மத வழிபாட்டு தலத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை சூறையாடிய அந்த கும்பல் அங்குள்ள சுவற்றில் 'ராம்' என்று எழுதி வைத்து விட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரித்துவிட்டு சுவற்றில் 'ராம்' என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் பாண்டே, ஆகாஷ் திவாரி மற்றும் சிவா (மத்தியபிரதேசம்) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஆகாஷ் திவாரி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆவேஷ் மற்றும் சிவாவுக்கு பணம் அனுப்பி இவ்வாறான மத வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தும்படி ஆகாஷ் திவாரி உத்தரவிட்டு வந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.