மத்திய பிரதேசம்: சிறப்பு ஆயுதப்படை வீரர்களை ஏற்றி சென்ற பஸ் - கார் மீது மோதியதில் 3 பேர் பலி


மத்திய பிரதேசம்: சிறப்பு ஆயுதப்படை வீரர்களை ஏற்றி சென்ற பஸ் - கார் மீது மோதியதில் 3 பேர் பலி
x

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் இன்று அதிகாலை சிறப்பு ஆயுதப்படை வீரர்களை ஏற்றிய பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தனகதா கிராமத்திற்கு அருகே வந்தபோது எதிரே 5 பயணிகளுடன் வந்த கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் வந்த சிறப்பு ஆயுதப்படை வீரர்கள் 26 பேர் மற்றும் காரில் பயணித்த மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,

"ஆயுதப்படை வீரர்களை ஏற்றி சென்ற பஸ், மாண்ட்லாவில் இருந்து பந்தூர்னா நோக்கி சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கன்ஹையா ஜஸ்வானி (75), நிக்லேஷ் ஜஸ்வானி (45), டிரைவர் புருஷோத்தம் மஹோபியா (37) ஆகியோர் பலியாகினர். இறந்தவர்கள் மாண்ட்லாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காரில் இருந்த மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், கியோலாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பஸ்சில் இருந்த 24 ஆயுதப்படை வீரர்கள் கியோலாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் நாக்பூருக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.


Next Story