வெளிநாட்டினர் சட்டத்தை மீறி தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது!
சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர், வெளிநாட்டினர் சட்டத்தை மீறி தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கவுகாத்தி,
வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு தேவாலயங்களின் அமைப்பான 'யுனைடெட் சர்ச் போரம்' மூலம் அசாமின் திப்ருகார் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதியுடன் மூன்று நாள் பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர், வெளிநாட்டினர் சட்டத்தை மீறி புதன்கிழமை திப்ருகார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் சுற்றுலாப் பயணிகள் மூவர் மீதும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மூவரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையில், அவர்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களை தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு துணை கமிஷனர் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் மூவரும், இன்று கவுகாத்திக்கு அனுப்பப்பட்டு பின்னர் சுவீடனுக்கு அனுப்பப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.