மேற்கு வங்கத்தில் இடியுடன் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் திடீரென கனமழை பெய்தது.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தின் தெற்குப் பகுதியில் நேற்று மாலையில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசிய காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இடியுடன் பெய்த இந்த கனமழைக்கு குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புர்பா பர்தமான் மாவட்டத்தில் மழையால் செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நாடியா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் இறந்தார். கொல்கத்தாவின் ரவீந்திர சரோபார் ஏரியில் படகு கவிழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், பெருநகரின் பல்வேறு பகுதிகளில் பல மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், கொல்கத்தாவில் உள்ள மகாநாயக் உத்தம் குமார் மற்றும் நேதாஜி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மெட்ரோ ரயில் பாதையில் மரம் விழுந்ததால், நகரின் முக்கிய சாலை போக்குவரத்து சுமார் 50 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தார்.
பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.






