பிரம்மோற்சவத்தால் ஜொலிக்கும் திருப்பதி... முத்யபு பாண்டிரி வாகனத்தில் சுவாமி வீதி உலா


பிரம்மோற்சவத்தால் ஜொலிக்கும் திருப்பதி... முத்யபு பாண்டிரி வாகனத்தில் சுவாமி வீதி உலா
x
தினத்தந்தி 17 Oct 2023 10:59 PM IST (Updated: 17 Oct 2023 11:23 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று, முத்யபு பாண்டிரி வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தொடங்கி, வருகிற 23-ம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும்.

பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இரண்டாவது நாளான நேற்று சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். மூன்றாவது நாளான இன்று, முத்யபு பாண்டிரி வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story