நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை முன் டி.கே.சிவக்குமார் ஆஜர்


நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை முன் டி.கே.சிவக்குமார் ஆஜர்
x
தினத்தந்தி 7 Oct 2022 6:45 PM GMT (Updated: 7 Oct 2022 6:45 PM GMT)

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரது சகோதரரான டி.கே.சுரேஷ் எம்.பி.யிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

பெங்களூரு:

நேஷனல் ஹெரால்டு வழக்கு

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், மீது இருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமாரும், அவரது சகோதரரான டி.கே.சுரேஷ் எம்.பி.யும் ஆஜராகி இருந்தார்கள்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது நடந்து வரும் நேஷனல் ஹெரால்டு வழக்கில், யங் இந்தியன் அமைப்புக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் டி.கே.சுரேஷ் எம்.பி. நிதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக அக்டோபர் 7-ந் தேதி (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேசுக்கு அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பி வைத்திருந்தது.

டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜர்

ஆனால் கர்நாடகத்தில் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை நடத்தி வருவதால், விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி சகோதரா்கள் சார்பில் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் நிராகரித்ததுடன், 7-ந் தேதி 2 பேரும் கண்டிப்பாக ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, பெங்களூருவில் இருந்து சகோதரர்கள் டெல்லி புறப்பட்டு சென்றார்கள். பின்னர் நேற்று காலையில் அங்குள்ள அப்துல்கலாம் ரோட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆஜரானார்கள்.

அவர்களிடம் நேஷனல் ஹெரால்டு விவகாரம் மற்றும் யங் இந்தியா அமைப்புக்கு நிதி உதவி அளித்தது குறித்து 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். டி.கே.சிவக்குமார் தரப்பில் இருந்து சில ஆவணங்களும் அதிகாாிகளிடம் வழங்கப்பட்டது. காலையில் இருந்து மாலை வரை 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சகோதரர்கள் வெளியே வந்தனர். ஏற்கனவே சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள டி.கே.சிவக்குமார் சகோதரர்களுக்கு தற்போது நேஷனல் ஹெரால்டு வழக்கும் புதிய தலைவலியை கொடுத்துள்ளது.


Next Story