கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் ஹெலிகாப்டரில் சோதனை
வாக்காளர்களு்கு பணம் எடுத்துச்சென்றாரா என கர்நாடக காங்கிரஸ்கட்சி தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
ஹெலிகாப்டர்களுக்கு கடும் கிராக்கி
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 22 நாட்களே உள்ளன. வருகிற 10-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கர்நாடகத்தில் தற்போது ஹெலிகாப்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் உள்ளன.
இருப்பினும் தேவை அதிகரித்துள்ளதால் கோவா, ஆந்திரா, மராட்டியம், ஆந்திரா, ஜெய்ப்பூர், டெல்லி, கொல்கத்தா, கொச்சி ஆகிய இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளன. சுமார் 150 ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் அரசியல் வாதிகளால் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஹெலிகாப்டர்கள் வாடகை நிறுவனங்கள் அதன் கட்டணத்தை 15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன.
இரு இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், 4 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ரூ. 2 லட்சத்து 60 ஆயிரமும், 8 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3½ லட்சமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாகன சோதனை தீவிரம்
இந்த நிலையில் தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த சாவடிகள் வழியாக செல்லும் கார்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமளிக்கும் வாகனங்களை நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் ரொக்கம், தங்க ஆபரணங்கள், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவரும், கர்நாடக மாநில தேர்தல் துணை பொறுப்பாளருமான அண்ணாமலை கர்நாடக கடலோர மாவட்ட பகுதிகளில் கட்சி வெற்றிக்காக பாடுபட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூருவில் இருந்து உடுப்பிக்கு தேர்தல் பணிக்காக ஹெலிகாப்டரில் சென்றார்.
அண்ணாமலை மீது புகார்
இதுபற்றி உடுப்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மந்திரியுமான வினய்குமார் சொரகே, உடுப்பி மாவட்டம் காபுவுக்கு அண்ணாமலை வரும்போது ஹெலிகாப்டரில் பணத்தை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்துள்ளார்.
அவர் வாக்காளர்களுக்கு பா.ஜனதாவினர் பணம் வினியோகம் செய்ததாகவும், பரிசு பொருட்கள் கொடுத்ததாகவும் எனக்கு தகவல் வந்தது. இதுபற்றி நான் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன் என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டரில் சோதனை
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் துமகூரு மாவட்டம் திப்தூருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அவரது ஹெலிகாப்டர் திப்தூரில் தரை இறங்கியதும், அங்கு காத்திருந்த தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர்.
அதாவது வாக்காளர்களுக்கு வினியோகிக்க அவர் பணம் அல்லது பரிசுப்பொருட்கள் எடுத்துச் சென்றாரா என சோதனையிட்டனர். இருப்பினும் டி.கே.சிவக்குமார் ஹெலிகாப்டரை விட்டு இறங்கவே இல்லை. அதில் இருந்து பைகளை திறந்து பார்த்து அங்குலம், அங்குலமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பரபரப்பு
இந்த சோதனையின் போது பணம் உள்ளிட்ட எந்த பொருட்களும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் சோதனையை முடித்து கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 16-ந்தேதி தான் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை காரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில், தேர்தல் அதிகாரிகள் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள், ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்தி வருவது அரசியல் கட்சியினருக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறது.