இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதலிடம் பிடித்த டி.கே.சிவக்குமார்


இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதலிடம் பிடித்த டி.கே.சிவக்குமார்
x

இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முதலிடத்தில் உள்ளார்.

பெங்களூரு:

புதுடெல்லியில் ஜனநாயகத்திற்கான சங்கம் இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 10 இடங்களை பிடித்த எம்.எல்.ஏ.களின் பெயர், விவரங்கள் வெளியாகி உள்ளது. அதாவது அந்த கோடீஸ்வர எம்.எல்.ஏ. பட்டியலில் முதல் இடத்தை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், மாநில துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி ஆகும்.

2-வது இடத்தை கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கே.எச்.புட்டசாமி கவுடா பிடித்துள்ளார். அவருக்கு ரூ.1,267 கோடி சொத்துகள் உள்ளது.

3-வது இடத்தை பெங்களூரு கோவிந்தராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியகிருஷ்ணா (ரூ.1,156 கோடி சொத்து) பிடித்துள்ளார்.

4-வது இடத்தை ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு (ரூ.688 கோடி சொத்து), 5-வது இடத்தை குஜராத் மான்சா தொகுதி எம்.எல்.ஏ. ஜெயந்தி பாய் சோம்பாய் படேல் (ரூ.648 கோடி), 6-வது இடத்தை பெங்களூரு ஹெப்பால் தொகுதி எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான பைரதி சுரேஷ் (ரூ.648), 7-வது இடத்தை ஆந்திர முதல்-மந்திரியும், புல்வெந்தலா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி (ரூ.510 கோடி), 8-வது இடத்தை மராட்டிய மாநிலம் காட்கோபர் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பராக்ஷா (ரூ.500 கோடி), 9-வது இடத்தை சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூர் தொகுதி எம்.எல்.ஏ. டி.எஸ்.பாபு (ரூ.500 கோடி), 10-வது இடத்தை மராட்டிய மாநிலம் மலபார் ஹில் தொகுதி எம்.எல்.ஏ. மங்கள்பிரபாத் லோதா (ரூ.441 கோடி) ஆகியோர் பிடித்துள்ளனர்.


Next Story