100 நாள் வேலைத்திட்ட நிதி வழங்கத்தவறினால் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
100 நாள் வேலைத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கத்தவறினால், டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டம்
மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்குகிற வகையில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை கிடைப்பது உறுதி என்ற நிலை ஏற்பட்டது.
நிதி வழங்கவில்லை
ஆனால் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்துக்கு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என தெரிகிறது. இதற்காக மம்தா பானர்ஜி கடந்த மாதம் கொல்கத்தாவில் 2 நாள் தர்ணா போராட்டம் நடத்தினார்.
டெல்லியிலும் போராட்டம்
இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லியிலும் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை மெயினாகுரி என்ற இடத்தில் நேற்று நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் மம்தாவின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி எம்.பி., பேசும்போது வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு அளிப்பதில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போய் இருப்பதால் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள்.
சந்திக்க மறுத்த மந்திரி
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை மந்திரியை சந்திப்பதற்காக கட்சியின் எம்.பி.க்களுடன் டெல்லிக்கு சென்றேன். ஆனால் எங்களை மந்திரி சந்திக்கவில்லை. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு கூடிய விரைவில் வழங்க வேண்டும். வழங்கா விட்டால் டெல்லியில் நாங்கள் தர்ணா போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.