நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்படுவதை நேரில் காண ஆசைப்பட்ட 5 வயது பேரனுக்காக 200 கி.மீ பயணம் செய்த குடும்பம்!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள் இன்று தகர்க்கப்பட்டன.
நொய்டா,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள் இன்று தகர்க்கப்பட்டன.
இந்த நிலையில், நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்படுவதைக் காண ஆக்ராவிலிருந்து ஒரு குடும்பம் 200 கி.மீ பயணம் செய்து நொய்டா சென்றடைந்துள்ளது.
ரியாஸ்(49) என்பவர் தனது மகனுடன் ஆக்ராவில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரியாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் ஐந்து வயது பேரன் நொய்டாவில் சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை காண வேண்டுமென்று ஆசைபட்டுள்ளான்.
கட்டிடம் இடிக்கப்படும் சம்பவம் குறித்த காணொளியை அவரது பேரன் முகநூலில் பார்த்து தனது குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்துள்ளான். தான் நேரில் சென்று பார்க்க வேண்டுமென்று அடம்பிடித்துள்ளான்.
இதனையடுத்து ஐந்து வயது பேரனின் ஆசையை நிறைவேற்ற ரியாஸ் மற்றும் அவரது மனைவி ஆக்ராவிலிருந்து நொய்டா வரை 200 கிமீ பயணம் செய்துள்ளனர்.
ஆனால் பொதுமக்கள் அப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் கட்டிடங்கள் இடிக்கப்படுவதைக் காண தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நொய்டாவுக்குச் சென்றனர்.
இரட்டைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படாததால், நொய்டா நகருக்குள் நுழைந்த பிறகு அந்த குடும்பத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அவர்களை போன்ற பலரையும் இரட்டைக் கோபுரத்திற்கு சில நூறு மீட்டர்கள் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக யாரையும் கட்டிடத்தின் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை.
பொதுமக்கள் சிலர், "நாங்கள் குண்டுவெடிப்பைப் பார்க்க விரும்புகிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும். ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? அதை தூரத்தில் இருந்து கவனிப்போம். நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை" என்று சிலர் சொல்வதை கேட்க முடிந்தது.
கட்டிடம் இடிக்கப்பட்டதற்குப் பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் முகமூடிகளை அணியுமாறு நொய்டா ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.