தசரா விழாவில் பங்கேற்கமுதல்கட்டமாக 9 யானைகள் நாளை மைசூரு வருகை


தசரா விழாவில் பங்கேற்கமுதல்கட்டமாக 9 யானைகள் நாளை மைசூரு வருகை
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழாவில் பங்கேற்க முதல்கட்டமாக 9 யானைகள் நாளை (வெள்ளிக்கிழமை) மைசூருவுக்கு அழைத்து வரப்படுகிறது.

மைசூரு

மைசூரு தசரா

அரண்மனை நகரம், சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்பு சவாரி ஊர்வலம் எனப்படும் யானை ஊர்வலம் நடைபெறும்.

மைசூரு அரண்மனையில் இருந்து ராஜவீதிகள் வழியாக தீப்பந்தம் விளையாட்டுகள் நடைபெறும் பன்னிமண்டபம் வரை யானைகள் ஊர்வலமாக செல்லும். உடன் கலாசார குழுவினர், அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும்.

இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கண்டு ரசிக்க வருவார்கள்.

மின்விளக்கு டெண்டர்

இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதற்காக மைசூரு நகரில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தசரா திருவிழாவிற்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒரே வடிவில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லாமல் மக்களை கண்கவரும் வகையில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கப்படுகிறது. இந்தநிலையில் தசரா விழாவில் 14 யானைகள் பங்கேற்க உள்ளது.

கடந்த ஆண்டு பங்கேற்ற யானைகளில் கஜேந்திரா, கோபாலசுவாமி ஆகியவை உயிரிழந்து விட்டன. அதுபோல் வயதாகி உள்ள அர்ஜுனா யானையும் இந்த முறை தசரா விழாவில் பங்கேற்கவில்லை.

கர்ப்ப பரிசோதனை

இதேப்போல் கடந்த ஆண்டு வந்த தசரா ஊர்வலத்தில் பங்கேற்க வந்த லட்சுமி யானை கர்ப்பமாக இருந்்தது. தசரா விழா நடைபெறுவதற்கு முன்பே அந்த யானை ஆண் குட்டியை ஈன்றது.

இதனால் இந்த ஆண்டு தசரா விழாவில் யானைகளுக்கு முன்கூட்டியே கர்ப்ப பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு தசரா விழாவில் பங்கேற்க உள்ள 14 யானைகளுக்கு நாகரஒலே, பந்திப்பூர், குடகு மாவட்டம் துபாரே ஆகிய வனப்பகுதிகளில் கர்ப்ப பரிசோதனை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்தநிலையில் முதல்கட்டமாக 9 யானைகளை நாளை (வெள்ளிக்கிழமை) நாகரஒலே வனப்பகுதியில் இருந்து மைசூருவுக்கு அழைத்து வரப்படுகிறது.

நாளை வருகை

நாளை உன்சூர் தாலுகா நாகரஒலே வீரனஒசஹள்ளியில் 9 யானைகள் லாரிகளில் ஏற்றி மைசூரு அசோகபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்படுகிறது. அங்கிருந்து 9 யானைகள் பாரம்பரிய முறைப்படி வருகிற 4-ந்தேதி மைசூரு அரண்மணை வளாகத்திற்கு அழைத்து வரப்படுகிறது.

அரண்மனை வளாகம் கோட்டை அருகே 9 யானைகள் தங்கும் வகையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாகன்கள் தங்குவதற்கும், யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் தற்காலிக செட்டுகள் அமைப்பட்டுள்ளன.


Next Story