கர்நாடக சட்டசபை தேர்தல்: பா.ஜனதாவில் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் நிராகரிக்க மேலிடம் முடிவு
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்காமல் நிராகரிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:
வெற்றி பெற முடியாது
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அக்கட்சி, கர்நாடகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தியது. இதில் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. மேலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் எந்தெந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலை உள்ளது என்பது பற்றி தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அவ்வாறு பா.ஜனதாவை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டிக்கெட் கிடைக்காது
இதையடுத்து அந்த 20 தொகுதிகளில் புதிய முகங்களை களம் இறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் கிடைக்காது என்று பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல் பெலகாவி, தாவணகெரே, சிவமொக்கா, விஜயாப்புரா, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் கிடைக்காது என்று கூறப்படுகிறது. தென்இந்தியாவில் ஒரே மாநிலமான கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள பா.ஜனதா, எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜனதா மேலிடம் உறுதியாக உள்ளது.
கர்நாடகத்தில் பா.ஜனதா இதுவரை சொந்த பலத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008-ம் ஆண்டு சுயேச்சைகளின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைத்தது. கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சி கடந்த 2019-ம் ஆண்டு ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் பதவி விலகினர்.
எடியூரப்பா
இதையடுத்து பா.ஜனதா ஆட்சி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதாவில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கும் எடியூரப்பா வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இதனால் பா.ஜனதா பின்னடைவை சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.