பெங்களூருவில் டோயிங் முறை மீண்டும் அமல்படுத்தப்படாது; போலீஸ் கமிஷனர் தயானந்த் பேட்டி


பெங்களூருவில் டோயிங் முறை மீண்டும் அமல்படுத்தப்படாது; போலீஸ் கமிஷனர் தயானந்த் பேட்டி
x

பெங்களூருவில் டோயிங் முறை மீண்டும் அமல்படுத்தப்படாது என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று போலீஸ் கமிஷனர் தயானந்த் பேசியதாவது:-

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் டோயிங் செய்யப்பட்டு போக்குவரத்து போலீசார் தூக்கி சென்று வந்தனர். இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்பு உண்டானது. சில நேரத்தில் கைகலப்பும் ஏற்பட்டு இருந்தது. இதுபோன்ற காரணங்களால் பெங்களூருவில் வாகனங்களை டோயிங் முறை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

தற்போதும் கூட டோயிங் முறைக்கு ஏராளமான வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் வாகனங்களை டோயிங் செய்வது நடைமுறையில் இருந்த போது சில முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தது.

தற்போதுள்ள சூழ்நிலையில் பெங்களூருவில் மீண்டும் டோயிங் முறை அமல்படுத்தப்படாது. அந்த முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து போலீஸ் துறை எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை. அரசிடம் இருந்தும் டோயிங் முறையை அமல்படுத்துவது குறித்து போலீஸ் துறைக்கு எந்த விதமான உத்தரவும் வரவில்லை.

எனவே பெங்களூரு நகரவாசிகள் டோயிங் பற்றி ஆதங்கப்பட வேண்டாம். அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றி, தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story