வாகன நெரிசல் மிகுந்த நகரத்தில் உலக அளவில் பெங்களூருவுக்கு 2-வது இடம்


வாகன நெரிசல் மிகுந்த நகரத்தில் உலக அளவில் பெங்களூருவுக்கு 2-வது இடம்
x

வாகன நெரிசல் மிகுந்த நகரத்தில் உலக அளவில் பெங்களூருவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

தகவல் தொழில் நுட்ப நகரமான பெங்களூரு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்கள் தொகையின் பெருக்கத்திற்கு ஏற்றார் போல் பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடுகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக புதிதாக மேம்பாலம் அமைத்தல், சாலை விரிவாக்கம், சிக்னல் இல்லாத சாலைகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை மட்டும் குறைந்தபாடில்லை. நகரின் எந்த சாலைக்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். பெங்களூரு அருகே போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கி சமீபத்தில் ஒரு குழந்தை உயிர் இழக்க நேரிட்ட பரிதாபமும் நடந்துள்ளது. பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் போக்குவரத்துக்கு சிறப்பு போலீஸ் கமிஷனராக எம்.ஏ.சலீமையும் அரசு நியமித்துள்ளது.

பெங்களூருவுக்கு 2-வது இடம்

அவர் சிறப்பு கமிஷனராக பதவி ஏற்ற பின்பு எடுத்த நடவடிக்கைகளால் நகரில் உள்ள சில மேம்பாலங்கள், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கிறது. ஆனாலும் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணமுடிந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை சமீபத்தில் உலக அளவுக்கு தெரியும் விதமாக மாறி இருந்தது.

அதாவது டாம் டாம் என்ற ஒரு தனியார் நிறுவனம் உலக அளவில் வாகன நெரிசல் உள்ள நகரங்கள் குறித்து ஒரு ஆய்வை நடத்தி, அதற்கான பட்டியலையும் வெளியிட்டு இருந்தது. அந்த ஆய்வில் உலகின் வாகன நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூருவுக்கு 2-வது இடம் கிடைத்திருந்தது. அதன்படி, பெங்களூரு மத்திய பகுதிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆவதால், லண்டன் முதலிடத்தை பிடித்திருந்தது.

134 மணி நேரத்தை...

நமது நாட்டின் தலைநகரான டெல்லி 34-வது இடத்திலும், மும்பை 47-வது இடத்தையும் பிடித்திருந்தது. மெட்ரோ நகரம் முழுவதும் (நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தொழிற்பேட்டைகள், கிராமங்கள்) என எடுத்து கொண்டால் பெங்களூருவுக்கு 5-வது இடம் கிடைத்திருந்தது. இந்த பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 23 நிமிடங்கள் 40 வினாடிகள் ஆவதாகவும் டாம் டாம் நிறுவனத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இவற்றில் சராசரி பயண வேகம் 22 கிலோ மீட்டர் மட்டுமே ஆகும்.

அதே நேரத்தில் பெங்களூருவில் வாழும் மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 260 மணி நேரத்தை (10 நாட்கள்) வாகனத்தை ஓட்டுவதிலும், 134 மணிநேரத்தை வாகன நெரிசலில் சிக்கி நேரத்தை கழிப்பதாகவும் அந்த நிறுவனம் நடத்தி இருந்த ஆய்வில் கூறி இருந்தது. இதன்மூலம் பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை டாம் டாம் நிறுவனம் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டு இருந்தது.

பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சாலையை விட நடைபாதை பெரிது

இதுகுறித்து பி.டி.எம். லே-அவுட்டை சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், "நான் உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறேன். ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை குறித்த நேரத்திற்குள் சென்று கொடுக்க வேண்டும். பெங்களூருவில் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக சில நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் உணவு பொருட்களை கொண்டு கொடுக்க முடியவில்லை. மெட்ரோ உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, பல சாலைகளை சுற்றி செல்ல வேண்டியது இருக்கிறது. காலை 8 மணிக்கே போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிடுகிறது. மக்கள் அனைவரும் தங்களது சொந்த வாகனத்தை உபயோகிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்" என்றார்.

கோரமங்களாவை சேர்ந்த சங்கர் கூறும் போது, "பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை. நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு காலை 9.30 மணிக்கு செல்ல வேண்டும். 10 நிமிடம் தாமதம் ஆனாலும் ரூ.50 சம்பளத்தில் கட் செய்து விடுவார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கி பலமுறை சம்பளத்தை இழந்துள்ளேன். பெங்களூருவில் பல சாலைகள் குறுகளாக உள்ளன. அழகுக்காக சாலையை விட நடைபாதையை பெரிதாக அமைத்திருப்பதும், சில முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் போலீசார், அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

வாகன விற்பனைக்கு அளவுகோல்

பெங்களூரு நகர லாரி டிரான்ஸ்போர்ட் ஏஜெண்டு சங்க முன்னாள் தலைவர் மு.பெரியசாமி கூறுகையில், "இந்தியாவின் வாகன கொள்கையை மாற்றினால் தான் பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வாகன நெரிசல் குறையும். பெங்களூருவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் விற்பனை ஆகின்றன. அதுபோல் ஒரு குடும்பத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள் என வாகனங்கள் அதிகமாக வைத்துள்ளனர். தனிநபர் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் பெங்களூரு வாகன நெரிசல் என்பது தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவாகி உள்ளது. மேலும் கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் செல்கிறார்கள். இதை தடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. வாகன விற்பனைக்கு அளவுகோல் நிர்ணயிக்க வேண்டும். அதாவது ஆண்டுக்கு இவ்வளவு வாகனங்கள் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பெருநகரங்களில் வாகன நெரிசல் என்பது குறையும். இல்லையெனில் போக்குவரத்து நெரிசல் என்பதை தீர்க்க முடியாது" என்றார்.

50-வது இடத்திற்கு செல்ல நடவடிக்கை

இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து போலீஸ் சிறப்பு கமிஷனர் எம்.ஏ. சலீம் கூறுகையில், "பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இருப்பது உண்மை தான். மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களின் கட்டமைப்பை ஒப்பிடுகையில், பெங்களூரு நகரம் முற்றிலும் மாறுபட்டது. டாம் டாம் நிறுவனம் எந்த அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தி பெங்களூருவுக்கு 2-வது இடத்தை கொடுத்திருந்தது என்பது தெரியவில்லை. அந்த நிறுவனம் நடத்திய ஆய்வின் தகவல்கள் முழுமையாக பரிசீலனை நடத்தப்படும்.

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அவர்களது ஒத்துழைப்பும் அவசியமாகும். நகரின் முக்கிய சாலைகளில் சிக்னல் இல்லாமல் வாகன ஓட்டிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-வது இடத்தில் இருக்கும் பெங்களூருவை வாகன நெரிசல் நகரங்களில் 50-வது இடத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.


Next Story