அடுத்தடுத்து சோகம்; ஒடிசா விபத்தில் காயம் அடைந்த பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது
ஒடிசாவில் ரெயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்தில் சிக்கிய சோகம் ஏற்பட்டு உள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் நேற்று இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதில் 288 பேர் பலியாகி உள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நகர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்த பகுதிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இருந்து, ரெயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ், மேற்கு வங்காளத்தின் மேதினிப்பூர் நகரில் சென்றபோது, அந்த பகுதியில் இருந்த வேன் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், காயங்களுடன் இருந்த பயணிகளில் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து, காயம்பட்ட பயணிகள் மேற்கு வங்காளத்தில் உள்ள வெவ்வேறு மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ஏற்கனவே காயம் பட்டு அவதிப்பட்டு வந்தவர்கள், சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் வழியில், மீண்டும் மற்றொரு விபத்தில் சிக்கியது அடுத்தடுத்து சோகம் ஏற்படுத்தி உள்ளது.