ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா?; பயணிகள் கருத்து


ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா?; பயணிகள் கருத்து
x

ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா என்பது குறித்து பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 2-ந்தேதி இரவு நடந்த சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் வெறும் 'சிக்னல்' பிரச்சினையால் 3 ரெயில்கள் முட்டிமோதிக் கொண்டதில் 275 அப்பாவிப் பயணிகளின் உயிர்கள் பறிபோயிருப்பதை நினைக்கையிலே நெஞ்சம் பதறுகிறது.

வரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துகளை முற்றிலும் தடுக்க ரெயில்வே நிர்வாகம், தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அதன்மேல் உள்ள நம்பகத்தன்மை போய்விடும்.

இன்றைய நிலையில் ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று உணருகிறீர்களா? என்று ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பயணிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

பயந்தால் பயணம் செய்ய முடியாது

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த தனுஞ்ஜெய் என்பவர் கூறுகையில், ஒடிசா ரெயில் விபத்து குறித்து கேள்வி பட்டேன். மிகவும் வேதனை அளிக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துகள் நடப்பது சகஜம் தான். விபத்துக்கு பயந்தால், பயணம் செய்ய முடியாது. தினமும் மோட்டார் சைக்கிள், கார் விபத்துகள் குறித்த செய்திகளை கேட்கிறோம். அதற்காக யாரும் வாகனங்களை வாங்காமல் இல்லை. வாகனங்களை ஓட்டி செல்லாமல் இல்லை. மேலும் அவ்வப்போது விமானங்கள் கூட விபத்தில் சிக்குகின்றன. ஆனால் யாரும் விமானத்தில் பயணம் செய்யாமல் இல்லை. நாளுக்கு நாள் விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் நெடுந்தூரத்திற்கு செல்வதற்கு ரெயில்கள் தான் வசதியாக உள்ளது. அதிகாரிகள் கவனத்துடன் பணி செய்தால், இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என்றார்.

பெங்களூருவை சேர்ந்த பாலகுமார் கூறுகையில், ரெயில் பயணம் எப்போதும் சுகமானதும், பாதுகாப்பானதும் தான். மேலும் ரெயில் பயணங்களில் பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் புதுமையான அனுபவங்களையும் ரெயில் பயணங்கள் தந்துள்ளன. எனது மகனுக்கு ரெயிலில் பயணம் செய்வது என்றால், கொள்ளை பிரியம். நாங்கள் இருவரும் ரெயில் பயணத்தின் அனுபவங்களை பெற அடிக்கடி ரெயிலில் பயணம் செய்து வருகிறோம். பிள்ளைகளுடன் ரெயிலில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் ரெயில் பயணம் இனிமையானது. விபத்து ஏற்பட்டதால் ரெயில் பயணம் பாதுகாப்பு இல்லை என கூற முடியாது. எதிர்பாராதவிதமாக நடைபெறுவது தான் விபத்து. இதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய ரெயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் எடுக்க வேண்டும். அனைத்து ரெயில்வே வழித்தடங்களிலும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும். பஸ்கள் மற்றும் கார்கள், வேன்களில் செல்வதை விடவும் ெரயில் பயணம் சுகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் உணர்கிறேன் என்றார்.

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் உள்ள கொஞ்சாடி பகுதியை சேர்ந்த சிந்தலைப்பட்டி செல்வராஜ் கூறுகையில், ெரயில் பயணம் பாதுகாப்பானது, சொகுசானது தான். ஆனால் தற்போதைய விபத்துகளை பார்க்கும்போது ரெயிலில் பயணம் செய்ய கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது. இருப்பினும் இது போன்ற விபத்துக்கள் இனி ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் அடிக்கடி ரெயில் பயணத்தைத் தான் மேற்கொள்கிறோம். ெரயில்வே நிர்வாகம் உடனடியாக இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அலசி ஆராய்ந்து வரும் நாட்களில் எந்த ஒரு ெரயிலிலும் விபத்தில் சிக்காமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில்களே விபத்தில் சிக்குவதில்லை. ஆனால் நமது நாட்டில் சாதாரணமாக 128 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ெரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் இனி ஏற்படாமல் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் என்பதை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மங்களூரு நகரின் கே.பி.டி. பகுதியை சேர்ந்த கோமதி கூறுகையில், ெரயில் பயணம் பாதுகாப்பானது தான். அதை நம்பித்தான் இன்று லட்சக்கணக்கான மக்கள் ரெயிலில் பயணிக்கின்றனர். ஏழைகளின் ரதம் என்றால் ரெயில் தான். ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துகளால் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற விபத்துக்கள் இனி ஏற்படாமல் இருக்க அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகளின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டாலும், இந்த விபத்துக்கான சரியான காரணங்களை அரசு பொதுமக்களுக்கு தெரிவிக்க மறுக்கிறது. ெரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கு காரணம் அதிகாரிகளின் கவன குறைவும், அரசின் அலட்சியமும் தான். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு சரியான பயிற்சிகளை நடத்தி இருக்க வேண்டும். தக்க அறிவுரைகள் கொடுத்திருக்க வேண்டும.் இதுபோன்ற கவனக்குறைவான செயல்களுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசும் பொறுப்பேற்று இனி இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ரெயில் பயணம் சுகமானது

மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரெயிலில் செல்ல இருந்த மைசூரு கே.ஆர்.நகரை சேர்ந்த நாகராஜு, அவரது நண்பர் ராேஜஷ் ஆகியோர் கூறுகையில், ெரயில்களில் பயணம் செய்வது ஒரு மாதிரியான சுகம். இது பாதுகாப்பானதும் கூட. இரவு நேரத்தில் படுத்து தூங்கிவிட்டு போகலாம். பஸ், கார் பயணங்களை விட ரெயில்களில் கட்டணமும் குறைவு. மேலும் உணவு, காபி, டீ கிடைக்கும். ஏதோ ஒரு சமயத்தில் ரெயில் விபத்து நடக்கிறது. அதற்காக ரெயில் பயணம் ஆபத்தானது என கூற முடியாது. ரெயிலில் முதியவர்கள், பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். ஆபத்தை விட ரெயில் பயணம் பாதுகாப்பானது என்பதை பல முறை உணர செய்துள்ளது. எங்களை பொறுத்தவரை ரெயில் பயணம் பாதுகாப்பானதாக உணர்கிறோம் என்றனர்.

அதுபோல் மைசூரு-பெங்களூரு ரெயிலில் பயணம் செய்ய வந்திருந்த மைசூருவை சேர்ந்த மாச்சம்மா கூறுகையில், ெரயில்களில் மட்டும் விபத்து நடக்கிறது என்று கூற முடியாது. பஸ்கள், கார்களில் சென்றாலும் கூட விபத்து நிகழ்கிறது. ரெயில்வே ஊழியர்களின் கவனக்குறைவால் தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கிறது. அல்லது சிக்னல் கோளாறு உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சினையாலும் ரெயில்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே ரெயில் பயணத்தை ஆபத்தானது என கூற முடியாது. மற்ற போக்குவரத்துகளை விட ரெயில் பயணம் பாதுகாப்பானது தான். நான் பல முறை ரெயிலில் பயணம் செய்துள்ளேன். இதுவரை எந்தவொரு தொந்தரவும் ஏற்பட்டதில்லை. வடமாநிலங்களில் தான் ரெயில் விபத்துக்கள் அதிகளவில் நடக்கிறது. இதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பயணிக்கும் போது தூக்கம் வருமா?

சிவமொக்கா டவுன் காசிபுரா பகுதியை சேர்ந்த வியாபாரி பிரசாந்த் கூறுகையில், நான் அடிக்கடி சிவமொக்கா நகரில் இருந்து பெங்களூரு, சென்னை என்று பல ஊர்களுக்கு ெரயிலில் தான் விரும்பி பயணிப்பேன். பஸ்சில் பயணிக்க விரும்ப மாட்டேன். காரணம் சாலை விபத்துக்கள் அதிகம், மேடு பள்ளங்கள் அதிகம், விரும்பிய நேரத்தில் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாது. ெரயிலில் உட்காரலாம், நிற்கலாம் அப்படியே சிறிது நடைபயிற்சி செய்யலாம். ரெயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இயற்கை காட்சிகளை ரசிக்கலாம் செய்கிறோம். ஆனால் ஒடிசாவில் நடந்த கோர ரெயில் விபத்தை பற்றி செய்திகளை பார்த்த பிறகு, ரெயிலில் பயணிக்கும் போது இனி இரவில் தூக்கம் வருமா என்ற அச்சம் உள்ளது.

நமது நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் ெரயில் விபத்துகள் நடப்பது சகஜம். ெரயிலில் இருந்து இறங்கும் போதும், ஏறும் போதும், தண்டவாளத்தை கடக்கும் போது விபத்தில் சிக்கி மக்கள் உயிரிழப்பது உண்மை தான். ஆனால் 130 கிலோமீட்டர் வேகத்தில் வந்த கோரமண்டல் ெரயில், சரக்கு ரெயில் மீது மோதிய காட்சிகளும், சின்னா பின்னமாக விழுந்து கிடந்த உடல்களும் என்னை பெரிதும் பாதித்துள்ளது. விரைவில் நான் ரெயிலில் வெளியூர் பயணம் செய்ய உள்ளேன். அப்போது தான் ரெயில் பாதுகாப்பானதா? என்பதை என்னால் உணர முடியும். எதுவாகினும் ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாக இருக்க ரெயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.


Next Story