2 ஆண்டுகளுக்கு ஒரு முறை போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்

பெங்களூருவில் தனியார் தொலைகாட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேசியதாவது:-
பெங்களூரு:-
கர்நாடகத்தில் தற்போது போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஒரு அதிகாரி, ஒரு பொறுப்பில் ஒரு ஆண்டுமட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அதற்குள் அவர்கள் பணிஇடமாறுதல் செய்யப்படுகின்றனர். இந்த நடைமுறையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போலீஸ் அதிகாரிகள் 2 ஆண்டுக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இது அடுத்த ஆண்டு (2024) முதல் அமலுக்கு வர இருக்கிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை போலீஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வது தொடர்பாக சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும். அதற்கான வேலைகள் மேற்கொள்ளப்படும். 2 ஆண்டுகள் ஒரு போலீஸ் அதிகாரி, ஒரே பொறுப்பில் பணியாற்றுவதன் மூலமாக தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும். இதுபோன்ற காரணங்களால் போலீஸ் அதிகாரிகளை 2 ஆண்டுக்கு ஒரு முறை பணிஇடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு மந்திரி பரமேஸ்வர் கூறினார்.






