ராகுல்காந்தி கோரிக்கையை தொடர்ந்து காயமடைந்த குட்டி யானைக்கு சிகிச்சை
ராகுல்காந்தி கோரிக்கையை தொடர்ந்து காயமடைந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடந்த 5-ந்தேதி ராகுல்காந்தி ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் நாகரஒலே வனப்பகுதியில் கபினி அணை நீர்த்தேக்கப்பகுதியில் ஒரு குட்டியானை பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடுவதாகவும், அந்த குட்டி யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். மேலும் இதுதொடர்பாக அவர் தாயுடன் காயமடைந்த குட்டியானை இருந்த படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ராகுல்காந்தியின் கடிதத்திற்கு பதில் அளித்த முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, காயமடைந்த குட்டியானையை மீட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதையடுத்து நாகரஒலே உதவி வனப்பாதுகாவலர் வி.சி.ஹர்ஷா தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கபினி அணை பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி யானையை மீட்டனர். பின்னர் அதற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த குட்டியானையை தாய் யானையிடம் விட்டனர். இரு யானைகளும் கபினி அணைப் பகுதியிலேயே சுற்றித்திரிவதாகவும், நலமாக இருப்பதாகவும் உதவி வன பாதுகாவலர் வி.சி.ஹர்ஷா தெரிவித்துள்ளார்.