சர்வதேச எல்லையில் ஊடுருவல்; வங்காளதேச கால்நடை கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டு கொலை
சர்வதேச எல்லை வழியே நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற வங்காளதேச கால்நடை கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
கூச்பெஹார்,
மேற்கு வங்காளத்தின் கூச்பெஹார் மாவட்டத்தில் காய்மரி என்ற இடத்தில் இந்தோ-வங்காளதேச சர்வதேச எல்லை அமைந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, வங்காளதேசத்தில் இருந்து வாகனம் ஒன்றில் 20 பேர் கொண்ட கும்பல் கால்நடைகளை கடத்தி கொண்டு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதற்கு இந்திய தரப்பில் உள்ள அவர்களது கூட்டாளிகளும் உதவியுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வகையில், சட்டவிரோத மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் ஊடுருவலில் ஈடுபட முயன்ற அவர்களை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் திரும்பி செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
அதனை இரு தரப்பினரும் கண்டு கொள்ளாமல் முன்னேறினர். இதனால், படையினர் தரப்பில் முதலில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், மூங்கில் கம்புகள், ஆயுதங்களுடன் வந்திருந்த அவர்கள் படை வீரர்களை தாக்க வந்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியும், கல்வீச்சிலும் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால், வேறு வழியின்றி தற்காத்து கொள்ளும் வகையில் படையினரில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கடத்தல் கும்பலில் 2 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். காயமடைந்த 2 பேர் பின்னர் உயிரிழந்து விட்டனர். இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.