மாநிலங்களவை தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு: கர்நாடகத்தில் 4-வது இடத்திற்கு மும்முனை போட்டி


மாநிலங்களவை தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு:  கர்நாடகத்தில் 4-வது இடத்திற்கு மும்முனை போட்டி
x

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. 4-வது இடத்திற்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. 4-வது இடத்திற்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

4 இடங்களுக்கு தேர்தல்

மாநிலங்களவையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு 10-ந் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் கர்நாடகத்தில் 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி ஆளும் பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் குபேந்திர ரெட்டியும் போட்டியிட்டுள்ளனர். 4 இடங்களுக்கு 6 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள்.

45 உறுப்பினர்களின் ஆதரவு

கர்நாடக சட்டசபையில் உள்ள கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதா சார்பில் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேசும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 4-வது இடத்திற்கு பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது.

முதலில் 45 எம்.எல்.ஏ.க்கள் நிர்மலா சீதாராமனுக்கும், அடுத்த 45 எம்.எல்.ஏ.க்கள் நடிகர் ஜக்கேசுக்கும் வாக்களிக்க உள்ளனர். மீதமுள்ள 32 எம்.எல்.ஏ.க்கள் லெகர்சிங்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 70 பேர் உள்ளனர். அதில் முதலில் 45 எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ராம் ரமேசுக்கு வாக்களிக்கிறார்கள். அதுபோக மீதமுள்ள 25 எம்.எல்.ஏ.க்கள் மன்சூர் அலிகானுக்கு வாக்களிக்க உள்ளனர். ஜனதா தளம் (எஸ்) கட்சியில் 32 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அக்கட்சியின் வேட்பாளர் குபேந்திர ரெட்டிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

4-வது இடத்தை கைப்பற்ற எந்த கட்சியிடமும் போதுமான எண்ணிக்கையில் வாக்குகள் இல்லை. அதனால் ஆளும் பா.ஜனதா திரைமறைவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சி அக்கட்சிக்கு எந்த அளவுக்கு கைக்கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 4-வது இடத்திற்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆதரவு?

4-வது இடத்திற்கு மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி, காங்கிரசின் ஆதரவை கேட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தங்களுக்கு ஆதரவு தரும்படி ஜனதாதளம் (எஸ்) கட்சியை வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும் சித்தராமையா கடிதம் எழுதிய சம்பவம் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருடன், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி போனில் மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக பேசியதாகவும், தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் போது டி.கே.சிவக்குமார், ஆதரவு கொடுப்பது பற்றி எதுவும் கூறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்குமா? அல்லது காங்கிரஸ் வேட்பாளரை ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரிக்குமா? என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. இதனால் மாநிலங்களவை தேர்தலில் 4-வது வேட்பாளராக எந்த கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

சோனியா காந்தியிடம் பேச தேவேகவுடா முயற்சி

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசின் ஆதரவை பெற ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் டெல்லியில் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஒருவர் மூலம் சோனியா காந்தியிடம் பேசி ஆதரவு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சோனியா காந்தியே முடிவு செய்தாலும் இங்குள்ள முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா அதை ஏற்கும் மனநிலையில் இல்லை. காங்கிரசில் சித்தராமையா மிக பலம் வாய்ந்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story