சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடிய திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி! வைரலாகும் படங்கள்
மஹுவா மொய்த்ரா சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடும் படங்களை பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எம்.பி மஹுவா மொய்த்ரா.
கிருஷ்ணாநகர் எம்பி கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. அதில் பங்கேற்ற மஹுவா மொய்த்ரா, சேலை அணிந்துகொண்டு தான் கால்பந்து விளையாடும் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, ஒரு சிவப்பு-ஆரஞ்சு நிற புடவையுடன் விளையாட்டு காலணிகள் அணிந்துகொண்டும் ஒரு ஜோடி சன்கிளாஸ் கண்ணாடியை மாட்டிக்கொண்டும் கால்பந்து மைதானத்தில் களமிறங்கி விளையாடினார்.
கால்பந்து விளையாடும் படங்களை சமூக வலைதளங்களில் இன்று அவர் பகிர்ந்துள்ளார். அதனை "வேடிக்கையான தருணங்கள்" என்று அவர் குறிப்பிட்டார். இந்த படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
மஹுவா மொய்த்ரா கால்பந்து விளையாடுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக மேற்கு வங்கம் முழுவதும் கால்பந்து போட்டிகளை ஏற்பாடு செய்தபோதும் அவர் கால்பந்து விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.