சிவசேனா கட்சி சின்னம் முடக்கம்: உதயசூரியன் அல்லது திரிசூலம் சின்னத்தில் போட்டியிட உத்தவ் தாக்கரே அணி விருப்பம்!
உத்தவ் தாக்கரே அணிக்கு புதிய சின்னங்களை தேர்வு செய்யும் பட்டியலில் திரிசூலம், உதய சூரியன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மும்பை,
உத்தவ் தாக்கரே அணிக்கு புதிய சின்னங்களை தேர்வு செய்யும் பட்டியலில் திரிசூலம், உதய சூரியன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கடந்த மே மாதம் உயிரிழந்த சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தநிலையில் ஷிண்டே தரப்பில் கடந்த 4-ந்தேதி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வில்-அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்க கூடாது என கோரிக்கை வைத்தனர்.
இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட உத்தரவில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் கட்சியின் பெயரையோ அல்லது வில்- அம்பு சின்னத்தையோ பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும் இரு பிரிவினரும் தங்கள் அணிக்கான 3 புதிய பெயர்களை திங்கட்கிழமைக்குள்(நாளை) தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதுடன், தேவையான இலவச சின்னங்களை தேர்வு செய்து பரிந்துரைக்குமாறு அதில் கோரியுள்ளது.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி, இன்று தனது மூன்று விருப்ப சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
திரிசூலம், உதய சூரியன் மற்றும் டார்ச் ஆகியவற்றுள் ஒன்றை புதிய சின்னமாக தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிசூலம் அதன் முதல் விருப்பமாக, இரண்டாவது விருப்பமாக 'உதய சூரியன்', மூன்றாவது விருப்பமாக 'டார்ச்' தேர்வு செய்துள்ளது.
அதேபோல, சிவசேனா (பாலாசாகேப் தாக்கரே)', 'சிவசேனா (பிரபோதங்கர் தாக்கரே)' அல்லது 'சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே)' ஆகிய பெயர்களை தேர்வு செய்துள்ளது.