கேரளாவில் அவலம்: அண்ணன் மகனான 8 வயது சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்திய நபர் கைது
கேரளாவில் அண்ணன் மகனான 8 வயது சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்தி அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் நெய்யாட்டிங்கரை பகுதியில் வசித்து வருபவர் மனு. இவரது அண்ணன் மகனான 8 வயது சிறுவனை அழைத்து கொண்டு ஓணம் பண்டிகை கொண்டாட அவர் வெளியே சென்றுள்ளார்.
இதன்பின்னர் அவர், மது கடை ஒன்றிற்கு சென்று பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் சிறுவனிடம் பீரை கொடுத்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சிறுவனும் வேறு வழியின்றி அதனை வாங்கி குடித்து உள்ளான்.
இதனை மனு வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இதன்பின்பு அந்த வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து உள்ளார். இதனை சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.
உடனடியாக அவர்கள் நெய்யாட்டிங்கரை போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்து உள்ளனர். அந்த வீடியோவில், சிறுவனை பீர் குடிக்க சொல்லி மனு கூறுவது தெரிகிறது. அதனை பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் என்ன, ஏது என்று எதுவும் கேட்கவில்லை.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை மனு அழைத்து சென்றதும், மதுபான கடையில் பீர் வாங்கி சிறுவனை குடிக்க கூறி கட்டாயப்படுத்தியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அண்ணன் மகனான சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்தி அதனை வீடியோவும் எடுத்து பகிர்ந்த மனுவை போலீசார் கைது செய்துள்ளனர்.