'பாரத் ராஷ்டிரிய சமிதி' என்ற புதிய தேசிய கட்சியை தொடங்கினார் சந்திரசேகர ராவ்


பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை தொடங்கினார் சந்திரசேகர ராவ்
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 5 Oct 2022 8:59 AM GMT (Updated: 5 Oct 2022 11:10 AM GMT)

தேசிய அரசியலில் கால் பதிக்க ஏதுவாக 'பாரத் ராஷ்டிரிய சமிதி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருக்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்க நெருங்க அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது. முதலில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில், தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மாதம், கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். கடந்த மாதம் 5-ந் தேதி பேசிய சந்திரசேகர ராவ், மத்தியில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதல் முதலில் அறிவித்தார்.

தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பா.ஜனதாவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்க தொடங்கினார். இதன்படி பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார்.

இந்த சூழலில் இன்று காலை தசரா பண்டிகையையொட்டி, பிரகதிபவனில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் சிறப்பு பூஜைகளை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், சிஎம்ஓ அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

இந்தநிலையில், தேசிய கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பை முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இன்று வெளியிட்டார். இதன்படி தேசிய அரசியலில் கால் பதிக்க ஏதுவாக 'பாரத் ராஷ்டிரிய சமிதி' என்று கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி-ஐ, பாரத் ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்ற பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தேசிய கட்சிக்கு, தற்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு உள்ள கார் சின்னத்தையே ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story