புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டம்


புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2024 10:19 AM GMT (Updated: 2 Jan 2024 11:56 AM GMT)

சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து, அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள அச்சட்டங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் வாகன விபத்து தொடர்பான திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது.

அதில், சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி, டிரக், பேருந்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த ஒரு டிரைவரும் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துவது இல்லை. அதற்காக 3 ஆண்டுகள் இருந்த தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்துவது தேவையற்றது.என டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய தண்டனைச் சட்டத்தில் உள்ள இந்த விதிக்கு எதிராக மராட்டிய மாநிலத்தில் பல இடங்களில் லாரி டிரைவர்கள் 'ரஸ்தா ரோகோ' என்ற பெயரில் போராட்டங்களை நடத்தினர். டிரைவர்களின் இந்த போராட்டத்தால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் பகுதியில் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் டிரக் டிரைவர்கள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் ஒருவர் காயமடைந்தார். காவல்துறை வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

அதேபோல், சோலாப்பூர், கோலாப்பூர், நாக்பூர் மற்றும் கோண்டியா மாவட்டங்களிலும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நவி மும்பை மற்றும் பிற இடங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சதீஷ்காரில் பல இடங்களில் வணிக பேருந்துகள் மற்றும் டிரக் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தண்டனைச் சட்டத்தில் உள்ள விதியை திரும்பப் பெறக் கோரி அவர்கள் அப்போது முழக்கங்களை எழுப்பினர். மாநிலம் முழுவதும் உள்ள 12,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் ராய்ப்பூர், பிலாஸ்பூர், துர்க் மற்றும் ராஜ்நந்த்கான் ஆகிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

பஞ்சாப்பில் மோகாவில் உள்ள லூதியானா-பெரோஸ்பூர் சாலையில் டிரக் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹூக்ளி மாவட்டத்தில் தங்குனி சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் மறித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

இந்த போராட்டத்தால் வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் வரிசையில் பெட்ரோல், டீசல் வாங்க காத்திருக்கின்றனர்.


Next Story