தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற பஸ் மீது லாரி மோதி விபத்து - 11 பேர் பலி


தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற பஸ் மீது லாரி மோதி விபத்து - 11 பேர் பலி
x

தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலியாகினர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் விர்ந்தவன் நகருக்கு இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது.

அந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதிகாலை 4.30 மணியளவில் ராஜஸ்தானின் பாரத்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சென்றபோது திடீரென பஸ் பழுதாகி நின்றது.

இதனால், டிரைவர், பயணிகள் உள்ளிட்டோர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலையில் பஸ்சின் பின்புறம் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி சாலையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 11 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story