சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் புளூ டிக்கை நீக்கியது டுவிட்டர் நிறுவனம்


சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் புளூ டிக்கை நீக்கியது டுவிட்டர் நிறுவனம்
x
தினத்தந்தி 21 April 2023 3:00 AM GMT (Updated: 21 April 2023 3:09 AM GMT)

சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

புதுடெல்லி,

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டுவிட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.

சந்தா கட்டியவர்களின் கணக்குளின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கணக்குகளில் புளூ டிக்குகள் உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை.





Next Story