2013 முசாபர்நகர் மதகலவரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை
2013-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் மதக்கலவரம் ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்து - இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே நடந்த இந்த மதக்கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே, இந்த மதக்கலவரத்தின் போது பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்களும் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
மதக்கலவரத்தின் போது தாங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 7 பெண்கள் புகார் அளித்தனர். ஆனால், 6 பெண்கள் தங்கள் புகாரை வாபஸ் பெற்றனர். மிரட்டல் காரணமாக அந்த 6 பெண்கள் தங்கள் புகாரை திரும்பப்பெற்றதாக பரவலான கருத்துக்கள் நிலவி வந்தது.
ஆனால், ஒரே ஒரு பெண் மட்டும் தன் புகாரை திரும்பபெறாமல் தொடர்ந்து வழக்கை சந்தித்தார். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் அளித்த புகாரில், மதக்கலவரத்தின் போது இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 26 வயதான அந்த பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் 3 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, குழந்தையை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி 3 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கலவரத்தை சாதகமாக பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண் வசிக்கும் ஹுஜானா என்ற கிராமத்தை சேர்ந்த 3 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிகப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிக்கந்தர், குல்தீப், மகேஷ்வீர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அதே கிராமத்தில் டெய்லராக வேலை செய்துவந்த நிலையில் அந்த அடைக்கு அதேகிராமத்தை சேர்ந்த அந்த 3 பேரும் அவ்வப்போது வந்துள்ளனர். முசாபர்நகர் மதக்கலவரம் அந்த கிராமத்திற்கும் பரவியநிலையில் அப்போது குற்றவாளிகள் 3 பேரும் கத்தி முனையில் கணவர், பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வந்தது. அதில் வழக்கு நடைபெற்றுவரும் போதே குல்தீப் உயிரிழந்துவிட்டான். வழக்கு விசாரணை காலதாமதமாவதாகவும், விரைவில் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார்.
இதன் பின் இந்த வழக்கை விசாரணையை விரைந்து முடிக்கும்படி முசாபர்நகர் மாவட்ட கீழமை கோர்ட்டை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டை தொடந்து வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், முசாபர்நகர் மதக்கலவரத்தின் போது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கந்தர், மகேஷ்வீர் குற்றவாளிகள் என மாவட்ட கோர்ட்டு இன்று அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், பாலியல் குற்றவாளிகள் சிக்கந்தர், மகேஷ்வீர் ஆகிய 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.
20 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பையடுத்து, குற்றவாளிகள் சிக்கந்தர், மகேஷ்வீர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.