உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவினருக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!


உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவினருக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
x
தினத்தந்தி 10 Oct 2022 8:40 PM IST (Updated: 10 Oct 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் இரு பிரிவினரும் வில்- அம்பு சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

மும்பை,

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு புதிய தேர்தல் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியது.

கடந்த மே மாதம் உயிரிழந்த சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தநிலையில் ஷிண்டே தரப்பில் கடந்த 4-ந்தேதி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வில்-அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்க கூடாது என கோரிக்கை வைத்தனர்.

இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் கட்சியின் பெயரையோ அல்லது வில்- அம்பு சின்னத்தையோ பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

மேலும் இரு பிரிவினரும் தங்கள் அணிக்கான 3 புதிய பெயர்களை திங்கட்கிழமைக்குள்(இன்று) தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதுடன், தேவையான இலவச சின்னங்களை தேர்வு செய்து பரிந்துரைக்குமாறு அதில் கோரியுள்ளது.

இதையடுத்து உத்தவ் தாக்கரே அணியினர் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தனர். இதேபோல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அணிக்கு 'சிவ சேனா உத்தவ் பாலாசாகெப் தாக்ரே'என்ற பெயரும் 'தீப்பந்தம்' சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

மதம் தொடர்பான காரணங்களைக் கூறி, தேர்தல் ஆணையம் 'திரிசூலம்' சின்னத்தை ஒதுக்க மறுத்துவிட்டது. அதேபோல, 'உதய சூரியன்' மற்றும் 'கடா' ஆகிய சின்னங்கள் "இலவச சின்னங்களின் பட்டியலில் இல்லாததால்" ஒதுக்கப்படவில்லை.

உத்தவ் தாக்கரேவின் கோஷ்டியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், "உத்தவ் ஜி, பாலாசாஹேப் மற்றும் தாக்கரே ஆகிய கட்சியின் மூன்று முக்கிய பெயர்களும், கட்சியின் புதிய பெயரில் தக்கவைக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி" என்றார்.


Next Story