மராட்டிய அரசியல் : அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி...!


மராட்டிய அரசியல் : அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க  உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி...!
x

போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்த பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவை அடுத்து முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டு காலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா பிடிவாதம் பிடிக்க, அதை பா.ஜனதா திட்டவட்டமாக நிராகரித்தது.

இதனால் தனது இந்துத்வா கொள்கைக்கு முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்த சிவசேனா கூட்டணி அரசை அமைத்து அரசியல் அரங்கை அதிர வைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ஏற்றார்.

ஆனால் தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டு விட்டு, தேர்தலுக்கு பிறகு எதிராளிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்த சிவசேனா தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறிய பா.ஜனதா, உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க திரைமறைவில் தொடர்ந்து காய் நகர்த்தி வந்தது. ஆனாலும் பா.ஜனதாவின் வலையில் சிக்காமல் 2½ ஆண்டுகளை கடந்து சிவசேனா கூட்டணி அரசு நடத்தி வரும் நிலையில், கடந்த 20-ந் தேதி மராட்டியத்தில் அரசியல் பூகம்பம் ஏற்பட்டது.

ஆளும் சிவசேனாவின் ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் அன்று இரவோடு இரவாக குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அங்கிருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இடம் மாறி சொகுசு ஓட்டலில் முகாமிட்டனர். (இந்த இரு மாநிலங்களும் பா.ஜனதா ஆளுபவை). மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை காப்பாற்ற பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்த்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிவசேனா கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 55. ஆனால் தற்போது அதிருப்தி அணி வசம் மட்டுமே 38 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வசம் வெறும் 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.

சட்டசபையில் தற்போதைய பலம் 287 (உயிரிழந்த ஒரு எம்.எல்.ஏ.வை தவிர்த்து) ஆக உள்ளது. இதனால் 106 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக திகழும் பா.ஜனதா சிவசேனா அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.

இதற்கிடையே உத்தவ் தாக்கரே தரப்புக்கு செவி சாய்க்காத அதிருப்தியாளர்கள் தங்களுக்கு 3-ல் 2 பங்கிற்கு மேல் எம்.எல்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறியதோடு, தங்களது அணியின் சட்டமன்ற குழு தலைவராக மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை தேர்வு செய்து, அது தொடர்பான கடிதத்தை கவர்னர், துணை சபாநாயகர் (சபாநாயகர் பதவியிடம் காலியாக உள்ளது), சட்டமன்ற செயலாளருக்கு அனுப்பினர்.

அதிருப்தி அணியினர் கவர்னரை சந்தித்தால், அரசியல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்ந்து கவுகாத்தி ஓட்டலிலேயே தங்கியுள்ளனர். இதனால் அரசியல் இழுபறி நீடிக்கிறது.

இந்தநிலையில் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்கரே தரப்பு துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தது. கட்சி கொறடா உத்தரவை ஏற்று அதிருப்தியாளர்கள் கடந்த 22-ந் தேதி நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காததை காரணம் காட்டி இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த சட்டமன்ற செயலாளர் நேற்று அதிரடி நடவடிக்கையாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கும், உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்ற கேள்வியுடன் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார்.

நாளை மாலை 5.30 மணிக்குள் இந்த கடிதத்திற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று அதில் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்தநிலையில் சிவசேனா கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மனைவிகளுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தினர் மூலம் அதிருப்தி எம்எல்ஏ-க்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சில அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் உத்தவ் தாக்கரே நேரடியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story