எகிப்துக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வதற்காக மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் எகிப்து நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
இந்தியாவின் மிக பெரிய முதலீட்டு தளங்களில் ஒன்றாக எகிப்து நாடு உள்ளது. இதுவரை ரூ.25 ஆயிரத்து 90 கோடி மதிப்பீட்டளவில் எகிப்தில் இந்திய முதலீடு செய்யப்பட்டு உள்ளது. எகிப்தில் பல்வேறு திட்ட பணிகளில் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் எகிப்து நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், எகிப்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்.
நாளை (செப்டம்பர் 18-ந்தேதி) கெய்ரோ நகரில் நான் இருப்பேன். எகிப்து பாதுகாப்பு மந்திரி ஜெனரல் முகமது அகமது ஜகியை சந்தித்து பேச உள்ளேன்.
இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் அதனை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.