மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான தகவல் பரப்புவதாக மத்திய மந்திரி குற்றச்சாட்டு தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு
உரிய வசதிகள் இல்லாத மருத்துவ கல்லூரிகள் மீது நான் நடவடிக்கை எடுத்ததால், மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான தகவல் பரப்புவதாக மக்களவையில் மத்திய மந்திரி குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,
உரிய வசதிகள் இல்லாத மருத்துவ கல்லூரிகள் மீது நான் நடவடிக்கை எடுத்ததால், மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான தகவல் பரப்புவதாக மக்களவையில் மத்திய மந்திரி குற்றம் சாட்டினார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ரூ.1,900 கோடி ஒதுக்கீடு
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி குறித்து துணைக்கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், ''மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள், வேறு ஒரு மருத்துவ கல்லூரியில் நடந்து வருகின்றன. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக ரூ.1,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி இன்னும் ஏன் கட்டப்படவில்லை? என்று கேட்டனர்.
தவறான கல்லூரிகள் மீது நடவடிக்கை
அதற்கு மன்சுக் மாண்டவியா, அவர்களை சரமாரியாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-
சிலர் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய விரும்புகின்றனர். அவர்கள் ஏன் இதை செய்கின்றனர் என்று எனக்கு தெரியும். உரிய ஆசிரியர்களோ, உள்கட்டமைப்போ, நோயாளிகளோ இல்லாத மருத்துவ கல்லூரிகள் மீது நான் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
அதற்கான வெளிப்பாடாக இப்படி செய்கிறார்கள். எய்ம்ஸ் குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். மருத்துவ கல்லூரி முறைகேடுகளை மோடி அரசு அனுமதிக்காது. தவறான மருத்துவ கல்லூரிகள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அச்சுறுத்துகிறார்
மன்சுக் மாண்டவியா கருத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அதே சமயத்தில், பா.ஜனதா உறுப்பினர்கள் மாண்டவியாவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் ஆவேசமாக, ''இதுபோன்று பேசுவதற்கு அவர் யார்? அவர் எங்களை 'பிளாக்மெயில்' செய்கிறார். அச்சுறுத்துகிறார்'' என்று கூறினார்.
வெளிநடப்பு
சிறிது நேரம் அமளி நீடித்தது. உறுப்பினர்களை அமைதிப்படுத்த எண்ணிய சபாநாயகர் ஓம்பிர்லா, ''மத்திய மந்திரியின் அறிக்கையை ஆய்வு செய்கிறேன். அது முறையானதா, இல்லையா என்று முடிவு செய்கிறேன்'' என்று கூறினார்.
இருப்பினும், அதில் திருப்தி அடையாத தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-
மாணவர்கள் மருத்துவ படிப்புக்காக வெளிநாடு செல்வதை தடுக்க மருத்துவ கல்வியை மோடி அரசு விரிவுபடுத்தி வருகிறது. 2014-ம் ஆண்டு, நாட்டின் மொத்த மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. தற்போது, 657 ஆக உயர்ந்து விட்டது.
மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தி உள்ளோம். கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 37 மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளோம். 89 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.