கிணற்றில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு


கிணற்றில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் கிணற்றில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹோபா,

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் கிணற்றில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் இருந்த மோட்டாரை சரிசெய்ய முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று மாலை வீரேந்திர குமார் (வயது 58) மோட்டாரை சரிசெய்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாக அவர் மேலே வராததால் அவரது இரண்டு மகன்கள் தேவேந்திரனும், சந்திரபிரகாஷூம் கிணற்றில் இறங்கினர். அவர்களும் நீண்ட நேரமாகியும் கிணற்றில் இருந்து மேலே வரவில்லை.

இதையடுத்து வீரேந்திர குமாரின் மனைவி உதவி கேட்டு அழத் தொடங்க, அருகில் இருந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணற்றில் இறங்கிய அவர்கள், மயங்கிய நிலையில் இருந்த தந்தை மற்றும் மகன்களை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக அவர்களை ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா சமூக சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாவட்ட மாஜிஸ்திரேட் மனோஜ் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா குப்தா ஆகியோர் கிராமத்திற்கு சென்று உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story