உ.பி.புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பு; அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, அரசியல் செயற்பாட்டாளர் ஜாவத் முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது.
லக்னோ,
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, அரசியல் செயற்பாட்டாளர் ஜாவத் முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பதை தடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு அமர்வு நீதிபதிகளான போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
புல்டோசர் கொண்டு குடியிருப்புகள் அகற்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ``மாநில அரசின் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது உரிய சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இடிப்பு நடவடிக்கைகள் என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு 3 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பிரயாக்ராஜ் , கான்பூர் சிவில் அதிகாரிகள் உரிய பதிலளிக்க வேண்டும்'' எனக்கூறி, இந்த வழக்கு விசாரணையை அடுத்த 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.