உ.பி. போராட்டத்தில் வன்முறை; மொத்தம் 337 பேர் கைது
உத்தர பிரதேசத்தில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களில் இன்று காலை 7 மணிவரையில் மொத்தம் 337 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கான்பூர்,
டெல்லியை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஒரு பிரிவினர் கடையடைப்பு போராட்டத்துக்கு கடந்த 10ந்தேதி அழைப்பு விடுத்திருந்தனர்.
இதில் பயங்கர வன்முறை மூண்டது. நூற்றுக்கணக்கில் சாலைகளில் குவிந்த அந்த பிரிவினர் டயர்களை கொளுத்தியும், கடைகளை அடைக்க வற்புறுத்தியும் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. பின்னர் அவை போராடி அணைக்கப்பட்டன.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சகாரன்பூர், ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20 போலீஸ்காரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் அணிவகுப்பு ஊர்வலம் போன்றவை நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் கைது நடவடிக்கைகளையும் தொடங்கினர்.
இந்த வன்முறை தொடர்பாக 800க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் என கூறி இன்று காலை 7 மணிவரையில் மொத்தம் 337 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் பிரயாக்ராஜ் நகரில் இருந்து 92 பேர், சஹாரன்பூரில் இருந்து 83 பேர், ஹத்ராசில் இருந்து 52 பேர், மொராதாபாத்தில் இருந்து 40 பேர், பெரோசாபாத்தில் இருந்து 18 பேர் மற்றும் அம்பேத்கர்நகர் பகுதியில் இருந்து 41 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறை சம்பவத்திற்கு எதிராக இதுவரை 13 எப்.ஐ.ஆர்.களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி. பிரசாந்த் குமார் தெரிவித்து உள்ளார்.