மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்கா ஒப்புதல்; இந்தியாவுக்கு வெற்றி
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்கா ஒப்புதல் வழங்கியதில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்து உள்ளது.
புனே,
இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
இதனால், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதுபற்றி, மும்பையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞரான உஜ்வல் நிகாம் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இதனால், இந்தியாவுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. முதன்முறையாக இந்திய புலனாய்வு முகமைகள் அளித்த சான்றுகளை அமெரிக்க அரசு நம்பியுள்ளது என கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில், தஹாவூர் ராணா முக்கிய புள்ளியாக பின்புலத்தில் இருந்து செயல்பட்டு உள்ளார். அவர் இட்ட உத்தரவை டேவிட் ஹெட்லே செய்து வந்து உள்ளார்.
எனினும், டேவிட்டுக்கு அமெரிக்க கோர்ட்டில் இந்த வழக்கில் 35 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, அமெரிக்க கோர்ட்டுக்கும், டேவிட்டுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி அவரை இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ கொண்டு வர முடியாது.
ஆனால், ராணாவுக்கு கீழ் செயல்பட்ட தகவலை டேவிட் தெரிவித்து உள்ளார். ராணா வழிகாட்டுதலின் பேரிலேயே டேவிட் மும்பையில் அலுவலகம் ஒன்றை திறந்து உள்ளார். இதன்பின்னரே, டேவிட் தாக்குதலுக்கு இலக்கான இந்தியாவின் பகுதிகளை புகைப்படங்களாக எடுத்து உள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ஜமத்-உத்-தவா மற்றும் பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற ரகசிய தகவலையும் டேவிட் வெளியிட்டு உள்ளார்.
அவர்களுக்கு இடையே பகிரப்பட்ட சில இ-மெயில் தகவலையும் டேவிட் தந்து உள்ளார். இதனால், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவை அமெரிக்கா வழங்கியிருப்பது, இந்த வழக்கில் ஒட்டுமொத்த குற்ற சதித்திட்டம் பற்றிய விரிவான தகவல்களை பெறுவதற்கான தெளிவான சான்றாக அமையும் என்று நிகாம் கூறியுள்ளார்.
இது இந்தியாவுக்கு இந்த வழக்கில் பல வழிகளில் உதவும் என்றும் நிகாம் கூறியுள்ளார். டேவிட்டை நன்றாக விசாரித்து, முழு விவரங்களையும் நாங்கள் பாகிஸ்தானிடம் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆனால், ராணாவின் நாடு கடத்தல், பல வழிகளில் எங்களுக்கு உதவும். ராணா பாகிஸ்தானில் டாக்டராக முன்பு பணியாற்றி உள்ளார். பாகிஸ்தான் ராணுவத்திலும் அவர் சில காலம் வரை பணியாற்றி உள்ளார். இதனையும் டேவிட் கூறியுள்ளார். இது எங்களுக்கு மிக முக்கிய விசயம் ஆகும் என நிகாம் குறிப்பிட்டு உள்ளார்.