2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியா..? - ஜோ பைடன் பதில்


2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியா..? - ஜோ பைடன் பதில்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 10 April 2023 10:46 PM GMT (Updated: 11 April 2023 12:23 AM GMT)

வரும் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதையடுத்து ஜோ பைடன் தலைமையிலான அரசு, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த சூழலில் அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் , கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுவர்களா என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதே சமயம் இதுகுறித்த உறுதியான முடிவு விரைவில் வெளியிடுவேன் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் வரலாற்றில் மிகவும் வயதான அமெரிக்க ஜனாதிபதி ஆவார். அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது இரண்டாவது பதவிக் காலத்தின் முடிவில் அவருக்கு 86 வயது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். எனவே டொனால்டு டிரம்ப்பை வீழ்த்த ஜோ பைடனை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவற்கான முயற்சியில் ஜனநாயக கட்சி ஆலோசித்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.


Next Story