'திரவ டி.ஏ.பி., யூரியா உரங்களை பயன்படுத்துங்கள்' - விவசாயிகளுக்கு அமித்ஷா அழைப்பு
உரம் உற்பத்தியில் தற்சார்பு இந்தியாவை உருவாக்க திரவ டி.ஏ.பி., யூரியா போன்றவற்றை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய உர கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) தயாரித்து உள்ள திரவ டி.ஏ.பி.யின் (நானோ) விற்பனை நேற்று தொடங்கியது. இதில் 500 மி.லி. பாட்டில் ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் திரவ டி.ஏ.பி. விற்பனையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், விவசாயிகள் திரவ டி.ஏ.பி. மற்றும் யூரியாவின் பயன்பட்டை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புரட்சிகர நடவடிக்கை
திரவ வேளாண் இடுபொருட்கள், விளைச்சலின் தரம் மற்றும் அளவை அதிகரிக்கிறது. அத்துடன் மண் பாதுகாப்புக்கும் உதவுகிறது. மேலும் இறக்குமதி கட்டணத்தை குறைப்பதுடன், சேமித்து வைக்கவும், இடமாற்றம் செய்வதற்கும் எளிதாக உள்ளது.
இந்தியாவின் 60 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுடன் தொடர்பு உடையவர்கள். இத்தகைய திரவ உரத்தயாரிப்பு என்னும் புரட்சிகர நடவடிக்கை உரம் உற்பத்திதுறையில் நாட்டை தற்சார்பு கொண்டதாக மாற்றும்.
எனவே இத்தகைய திரவ டி.ஏ.பி. மற்றும் யூரியா போன்ற உரங்களின் பயன்பாட்டை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்.
செலவினம் குறைவும்
விவசாயிகளின் பயிர் விளைச்சலுக்கான செலவினத்தை 6 முதல் 20 சதவீதம் அளவுக்கு இந்த நானோ டி.ஏ.பி. குறைக்கும்.
நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. தயாரிப்புக்கு 20 ஆண்டுகளுக்கான காப்புரிமையை இப்கோ பெற்றுள்ளது. இந்த தயாரிப்புகளுக்கான காப்புரிமை கூட்டுறவுத்துறைக்கு கிடைக்கும் என்று அமித்ஷா கூறினார்.
5 கோடி பாட்டில்
இந்த நிலையில், குஜராத்தின் கலோல், கண்ட்லா மற்றும் ஒடிசாவின் பாரதீப் ஆகிய பகுதிகளில் நானோ டி.ஏ.பி. தயாரிப்பு நிலையங்கள் இயங்கி வருவதாக இப்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதில் கலோல் தொழிற்சாலையில் இந்த ஆண்டு 5 கோடி பாட்டில் டி.ஏ.பி. தயாரிக்கப்படும் என்று கூறியுள்ள இப்கோ, 2025-26-ம் ஆண்டு வரை இப்கோ மூலம் 18 கோடி நானோ டி.ஏ.பி. பாட்டில்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
பாதிக்கும் குறைவான விலை
ஒரு பாட்டில் திரவ டி.ஏ.பி.யில் 8 சதவீதம் நைட்ரஜன், 16 சதவீதம் பாஸ்பரஸ் அடங்கியுள்ளது. இது 50 கிலோ வழக்கமான டி.ஏ.பி.க்கு சமமானது என்றும் இப்கோ தெரிவித்து உள்ளது.
ஒரு மூடை டி.ஏ.பி. ரூ.1,350-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 500 மி.லி. நானோ டி.ஏ.பி. பாட்டில் ரூ.600-க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் டி.ஏ.பி.யின் வழக்கமான விலையை விட பாதிக்கும் குறைவாகவே இந்த நானோ டி.ஏ.பி. விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.